சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.44 முடிப்பது கங்கை
பண் - கொல்லிக் கௌவாணம்
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே.
1
தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள்
ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே.
2
தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச்
சிடடன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.
3
நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச்
சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.
4
வேயன தோளி மலைம களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும்
பேயனே பித்தனே என்ப ராலெம் பிரானையே.
5
இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த்
துறையொன்றித் தூமல ரிட்ட டியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவ தில்லை யோவெம் பிரானுக்கே.
6
தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப்
பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே.
7
அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே.
8
கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால்
எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை யோவெம் பிரானுக்கே.
9
காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரனெட் டோடி ரண்டுவி ரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றன்
ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com